×
Saravana Stores

மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி

சித்ரதுர்கா: போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார்; தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார் என்று பிரியங்கா காந்தி மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ‘பிரதமர் மோடியின் அரசில் பொய்கள் நிரம்பி வழிகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சட்டவிரோதச் செயல்களின் மூலம் கவிழ்க்கும்போது, அதை ஊடகங்கள் மோடியின் அதிரடி தாக்குதல் என்று வர்ணிக்கின்றன. பாஜகவின் இந்த செயலைக் கண்டிக்க யாரும் முன்வருவதில்லை. மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் பாஜக சீரழித்துள்ளது.

நாட்டு மக்களின் சொத்துகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்து பொய் பிரசாரம் செய்கின்றனர். நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. எப்போதாவது பெண்களின் ‘மாங்கல்யத்தையோ’, நகைகளையோ காங்கிரஸ் பறித்ததா? போர் காலத்தில், எனது பாட்டி இந்திரா காந்தி, தனது தங்க நகைகளை நாட்டுக்கு நன்கொடையாக அளித்தார். எனது தாயாரோ, நாட்டுக்காக தனது ‘மாங்கல்யத்தையே’ தியாகம் செய்தார்.

மாங்கல்யத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்திருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பெண்களின் சேமிப்பை பறித்தார். விவசாயிகள் போராட்டத்தின் போது, 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் மனைவிகளின் மாங்கல்யம் பறிபோனது பற்றி மோடி பேசுவாரா? பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் அனுபவித்த கஷ்டங்கள் அக்கட்சியினருக்கு தெரியவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில், பெண்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற நினைக்கின்றனர். இது வெட்கக் கேடானது’ என்றார்.

‘அப்பாயின்மென்ட்’ கொடுங்க!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவரை சந்தித்து பேசுவதற்கு எனக்கு நேரம் கொடுத்தால், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை விளக்கிக் கூறுவேன். முஸ்லிம்களுக்கு மட்டும் என்று எங்கே சொல்லி இருக்கிறது. எங்களது தேர்தல் அறிக்கையில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்குமானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மோடி பேச்சுகள் சமூகத்தை பிளவுபடுத்தவே நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், மக்கள் கேட்காமலேயே சில உரிமைகளை வழங்கினோம். உதாரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சொல்லலாம். உலக நாடுகளை எல்லாம் சுற்றிவரும் பிரதமர், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? ஆனால் மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார்’ என்றார்.

The post மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Priyanka Gandhi ,Chitradurga ,Congress Election Press Conference ,Chitradurga, Karnataka State ,Akkad ,General Secretary ,Dinakaran ,
× RELATED வெடி விபத்தில் காயம் அடைந்தவர்கள்...