×

முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி புகார்

சென்னை: தேர்தல் அரசியலுக்காக சிறுபான்மை முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், சென்னை வடக்கு மண்டல தலைவருமான முகமது ரஷீத் தலைமையில், எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.வி.ராஜா, செயலாளர் பாண்டித்துரை, மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சலீம் ஜாஃபர் ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அவர்களுக்கு, இந்துக்களின் தாலி தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்துக் கொடுத்து விடுவார்கள் என்று மதரீதியாக மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையில் மிக மோசமான முறையில் பேசியுள்ளார்.

தேர்தல் அரசியல் நலனுக்காக தான் வகிக்கும் பொறுப்பை மறந்து, சிறுபான்மை முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைத்து, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் மதரீதியாக பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி புகார் appeared first on Dinakaran.

Tags : Modi ,STBI party ,Chennai Police Commissioner ,CHENNAI ,Chennai North ,PM Modi ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்