×

சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

சென்னை: ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 39வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நாட் அவுட்டாக 60 பந்தில், 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 108 , ஷிவம் துபே 27 பந்தில், 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 66ரன்அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில் டிகாக் டக்அவுட் ஆக கேப்டன் கே.எல்.ராகுல் 16, தேவ்தத் படிக்கல் 13, நிக்கோலஸ் பூரன் 34ரன்னில் (15பந்து, 3பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். மற்றொரு புறம் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக சதம் விளாசினார். 19.3 ஓவரில் லக்னோ 4 விக்கெட் இழந்து 213 ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோனிஸ் 63 பந்தில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 124 , தீபக் ஹூடா 17 ரன்னில் (6பந்து) களத்தில் இருந்தனர். 8வது போட்டியில் லக்னோவுக்கு இது 5வது வெற்றியாகும். சிஎஸ்கே 8வது போட்டியில் 4வது தோல்வியை சந்தித்தது. கடந்த 19ம் தேதி லக்னோவிடம் தோற்ற சிஎஸ்கே, நேற்று சொந்தஊரில் மீண்டும் தோல்வியை சந்தித்தது. ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

வெற்றிக்கு பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் பேட் செய்தபோது முதலில் மிகவும் பின்தங்கிருந்தோம். சிஎஸ்கே நல்ல தொடக்கத்தை பெற்று பவுலர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். 210 ரன் எடுப்பார்கள் என நினைக்கவில்லை. வெற்றிக்கான அனைத்து பெருமையும் ஸ்டோனிசுக்கே சேரும். அவரின் ஆட்டம் பவர் ஹிட்டிங் மட்டுமல்ல, மிகவும் புத்திசாலித்தனமான பேட்டிங், என்றார்.

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியதாவது :இது விழுங்குவற்கு கடினமான(தோல்வி) மாத்திரையாகும். இது நல்ல போட்டியாக அமைந்தது. கடைசி நேரத்தில் லக்னோ சிறப்பாக விளையாடியது. நாங்கள் 13 – 14 ஓவர் வரை போட்டியை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் ஸ்டோனிஸ் மகத்தான இன்னிங்ஸ் ஆடினார். பனி தனது வேலையை செய்தது. அது அதிக அளவில் இருந்ததால் ஸ்பின்னர்களை போட்டியிலிருந்து வெளியே எடுத்தது. ஒருவேளை அது இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் அதிக கட்டுப்பாட்டை வைத்து போட்டியை இன்னும் ஆழமாக எடுத்துச் சென்றிருப்போம். நாங்கள் அடித்த ரன்போதாது என்று நினைத்தேன். ஏனென்றால் நாங்கள் இங்கு பயிற்சி செய்தபோது இரவில் பெரிய அளவில் பனி வந்தது. லக்னோ சிறப்பாக பேட்டிங் செய்தது, என்றார்.

சில பவுலர்களை குறி வைத்தோம்; ஆட்டநாயகன் ஸ்டோனிஸ் கூறியதாவது: ஐபிஎல் தொடரில் என்னை விட சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே இதை நான் அவர்களிடமே விட்டுவிடுகிறேன். நாங்கள் சில பந்துவீச்சாளர்களை குறிவைக்க விரும்பினோம். சில பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக இருக்க நினைத்தோம். நான் பவுண்டரி அடிக்க முடியாத ஒரு நேரம் இருந்தது. அதனால் உள்ளே வந்த பூரனால் மட்டுமே அழுத்தத்தை குறைக்க முடியும். அவர் அந்த வேலையை சரியாக செய்தார். எனக்கு ஆஸ்திரேலியா அணி ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. இது எனக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தெரியும். என்னுடைய இடத்திற்கு இளையவர்கள் வந்து நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் என்னுடைய வாய்ப்பில் நான் பங்களிக்க விரும்புகிறேன்” என்றார்.

பிட்ஸ்.. பிட்ஸ்..
* ருதுராஜ் சதம் அடி த்த 2 போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்துள்ளது. மற்ற எந்த வீரர் சதம் அடித்த போட்டியிலும் சிஎஸ்கே தோற்றது கிடையாது.
* ஐபிஎல்லில் சேசிங்கில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை ஸ்டோனிஸ் (124ரன்) படைத்தார். 2011ல் பஞ்சாப் வீரர் பால் வால்தாட்டி 120, 2011ல் சேவாக் (டெல்லி), 2021ல் சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்) தலா 119 ரன் அடித்துள்ளனர்.
* சேப்பாக்கத்தில் லக்னோ நேற்று 211ரன் எடுத்து வென்றது தான் சிறந்த சேசிங். இதற்கு முன் சிஎஸ்கே 2012ல் ஆர்சிபிக்கு எதிராக 206 ரன்னை சேசிங் செய்துள்ளது.
* ஐபிஎல் வரலாற்றில் லக்னோ 3வது முறையாக 200 பிளஸ் ரன்னை சேசிங் செய்துள்ளது. பஞ்சாப் 6, மும்பை 5 முறை 200பிளஸ்ரன்னை சேசிங் செய்து முதல் 2 இடத்தில் உள்ளன.

The post சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Snow ,CSK ,Ruduraj ,Chennai ,Chennai Super Kings ,Lucknow Super Giants ,IPL ,Chepauk ,Dinakaran ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...