×

பூச்சி மேலாண்மை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் வயலில் நேரடி செயல்விளக்கம்

திருமயம் : திருமயம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.புதுக்கோட்டை மாவட்டம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் ஆண்டுதோறும் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி விவசாயிகளுடன் தங்கி கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வேளாண் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி கிராமத்தில் தங்கி அப்பகுதி விவசாயிகளின் வேளாண்மை அனுபவங்கள் குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். அப்போது வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளின் விவசாய நுணுக்கங்கள், விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதல், விவசாய பயிர்களை பூச்சிகளில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவைகளை கற்று தேர்ந்து வருகின்றனர்.

இதனிடைய நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்க பயிற்சி செய்து காட்டினார்.அப்போது விவசாயி பழனியப்பன் பின்பற்றும் விவசாய முறைகள் குறித்தும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்கள் காப்பது குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயி பழனியப்பன் மேற்கொண்டுள்ள முறைகளை மாணவிகளுக்கு விளக்கினர்.

அப்போது வேளாண் கல்லூரி மாணவிகள் பூச்சி தாக்குதலை குறைத்து மகசூலை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். இம்முறைகளை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகள் மகசூலில் அதிக லாபம் பெறலாம் எனவும் இதனை மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறும்படியும் கேட்டுக் கொண்டனர்.

The post பூச்சி மேலாண்மை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் வயலில் நேரடி செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Agriculture College ,Thirumayam ,Pudukottai District Agricultural College ,Research Station ,
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்