×

வெயிலில் இருந்து காக்க கோடை மழை வருமா?

*கோவை மக்கள் எதிர்பார்ப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 100 டிகிரி முதல் 103 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த வாரங்களில் தொடர்ந்து 4 நாட்கள் 102 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், நேற்று 100.4 டிகிரி வெயில் பதிவானது. அடுத்த சில நாட்களுக்கும் வெயில் 100 டிகிரிக்கு மேல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் பாதிப்பாலும், அனல் காற்றாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகலில் வாட்டி எடுக்கும் வெயிலின் காரணமாக இரவு நேரங்களிலும் வீடுகளில் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. வெப்ப காற்று வீசி வருகிறது. பலர் வீட்டினுள் படுக்க முடியாமல், வீட்டில் இருந்து வெளியில் படுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை கோவை மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.

இந்நிலையில், கோவையில் 30 ஆண்டுகள் மழையளவு கணக்கீட்டின்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை மழையின் சராசரி என்பது 71.9 மி.மீ ஆகும். ஆனால், நடப்பாண்டில் தற்போது வரை மழை பெய்யவில்லை. இந்நிலையில், வரும் 26ம் தேதிக்கு பிறகு கோடை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோடை மழை பெய்தால் மட்டுமே தற்போது இருக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். மேலும், கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாத காரணத்தினால், சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட அணைகள் வறண்டு வருகிறது.

நொய்யல் ஆறு, குளம், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறட்சியில் இருக்கிறது. கோடை மழை இல்லாத காரணத்தினால் நகரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர, விவசாயிகளின் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும், கோடை மழை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், அடுத்த சில நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது விவசாயிகள், பொதுமக்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 35 மி.மீ மழை பதிவானது. பின்னர், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 23ம் தேதி வரை மழை பெய்யவில்லை. ஏப்ரலில் சில இடங்களில் மழை பெய்தாலும், பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை. மேலும், நடப்பாண்டில் கோடை மழை மார்ச் மாதம் 17 மி.மீ, ஏப்ரலில் 52 மி.மீ மற்றும் மே மாதத்தில் 66.55 மி.மீ பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச், ஏப்ரலில் தற்போது வரை மழை பெய்யவில்லை.

இருப்பினும், வரும் 26ம் தேதிக்கு மேல் 20 மி.மீ முதல் 25 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 15 மி.மீ, ஏப்ரலில் 34 மி.மீ, மே மாதத்தில் 182.7 மி.மீ மழை பெய்தது. இதனால், கடந்த ஆண்டு கோடை மழை 231.87 மி.மீ என சராசரியைவிட அதிகமாக பதிவானது. தவிர, 2022-ல் 69 மி.மீ மழையும், 2021-ல் 104 மி.மீ மழையும், 2020-ல் 170 மி.மீ மழையும் பதிவானது. நடப்பாண்டில், கோடை மழை பெய்ய காலதாமதம் ஏற்பட்டு வந்தாலும், சராசரி மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வனத்தில் மரங்கள் காய்ந்தது

மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், வனத்தில் கடும் வறட்சி காணப்படுகிறது. வனக்குட்டைகள், ஆறுகள் வறண்டு கிடக்கிறது. மேலும், வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினால், மரங்கள் காய்ந்து காட்சி அளிக்கிறது. மரங்களில் உள்ள இலைகள் கீழே உதிர்ந்து மரங்கள் அனைத்தும் எலும்பு கூடுகள் போல் இருக்கிறது. கோவை குற்றாலம் சாலையில் பச்சை நிறத்தில் பசுமையாக இருந்த தேக்கு மரங்கள் அனைத்தும் காய்ந்து போய் கிடக்கிறது. வனத்தில் காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் உள்ளது.

The post வெயிலில் இருந்து காக்க கோடை மழை வருமா? appeared first on Dinakaran.

Tags : Coimbatore Coimbatore ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...