×

இறுதியாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

*மாணவர்கள் ஜாலி

கோவை : கோவை மாவட்டத்தில் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி ஏப்ரலில் முடிந்தது. இதையடுத்து, பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துவிட்டது. பிளஸ்1, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த 2ம் தேதி துவங்கியது. இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 1,210 அரசு பள்ளிகள், 141 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 658 தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 4.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இத்தேர்வுகள் 12-ம் தேதி முடிக்கப்பட்டு 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

இந்நிலையில், 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10,12 ஆகிய நாட்களில் நடக்க இருந்த தேர்வுகள் ரம்ஜான், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ்புத்தாண்டு, பொது தேர்தல் உள்ளிட்ட காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறையை அடுத்து மீண்டும் பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பின்னர், 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீதியிருந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது. தேர்வுகள் முடிந்ததால் மாணவர்கள் குஷியாகினர். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post இறுதியாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Jolly Coimbatore ,Coimbatore ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...