கூடலூர்: கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணையில் ஏராளமான வாத்துக்கள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள துரைப்பள்ளி பகுதியில் கோழி மற்றும் வாத்து பண்ணை அமைந்துள்ளது. அங்கு கால்நடை மருத்துவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பண்ணையில் கோழி மற்றும் வாத்துகளை முழுமையாக ஆய்வு செய்தனர். அதன்பின்னர் அந்த பகுதியில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பண்ணையில் வளர்க்கப்படும் கோழி மற்றும் வாத்துகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் போது கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
The post கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.