×

சின்கோனா பகுதியில் 3 காட்டுமாடுகள் உயிரிழப்பு

*வனத்துறையினர் விசாரணை

ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா அருகே சின்கோனா பகுதியில் ஒரே இடத்தில் 3காட்டுமாடுகள் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி வன கோட்டம், நீலகிரி வடக்கு சரகம், சின்கோனா கிராமம் குடியிருப்பு அருகேயுள்ள புல்வெளியில் 3 காட்டுமாடுகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில், வனச்சரகர் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு ஒரு ஆண் காட்டுமாடு மற்றும் இரு பெண் காட்டுமாடுகள் இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. முதல்கட்ட ஆய்வில் அவற்றின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பது தெரியவந்தது‌. இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் இறந்து கிடந்த மூன்று காட்டுமாடுகளின் உடலையும் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த பிரேத பரிசோதனையில் காட்டுமாடுகள் புற்களை மட்டுமே சாப்பிட்டிருந்ததும், வேறு எந்த உணவு பொருட்களை உட்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து ஆய்விற்காக உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் அருகில் இரு நீர்நிலைகள் உள்ளன. அதிலிருந்து நீர் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஐவிஆர்ஐ டாக்ஸிகாலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. அறிக்கை கிடைத்த பின்னரே காட்டுமாடுகள் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் காட்டுமாடுகள் இறந்து கிடந்த பகுதியில் சந்தேகப்படும் படியான நிகழ்வுகள் ஏதேனும் நடந்துள்ளதா என நான்கு குழுக்கள் தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சின்கோனா பகுதியில் 3 காட்டுமாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Cinchona ,Ooty ,Thottapetta ,Nilgiri Forest Division ,Nilgiris North ,Charakam ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...