×

இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்

*புத்தக தின விழாவில் அறிவுரை

ஊட்டி : இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என ஊட்டியில் நடந்த உலக புத்தக தின விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு நேற்று புத்தக கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர் வட்ட தலைவர் கவிதாயினி அமுதவல்லி தலைமை வகித்தார். இரண்டாம் நிலை நூலகர் வில்லியம் வரவேற்றார்.

மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா முன்னிலை வகித்து பேசுகையில், ‘‘உலக புத்தக தின விழா கடந்த 1995ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. வாசிப்பின் சக்தியை மக்கள் அடையாளம் காண இந்நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மைய நூலகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினராக சேர்வதோடு மட்டுமல்லாமல், தவறாமல் வந்து புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயராகக்கூடிய இளைஞர்கள், மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுதவிர போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. இவற்றை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். நூலகத்தில் உள்ள வசதிகள் குறித்து மற்றவர்களிடமும் எடுத்து கூற வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, புத்தக கண்காட்சியை நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலசங்கத்தின் மாவட்ட தலைவர் சீனிவாசன் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இக்கண்காட்சியில், ஏராளமான அறிவியல், வானவியல், மருத்துவம், உளவியல் பொதுஅறிவு நூல்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான நூல்கள் என ‌நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

வாசகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் கண்காட்சி கண்டு பயன்பெற்றனர். பின்னர் இன்றைய கால சூழலில் பிள்ளைகளின் வெற்றிக்கு பெரிதும் பங்கு வகிப்பவர்கள் மாணவர்களே, பெற்றோர்களே, சமுதாயமே என வாசகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் பங்கு பெற்ற கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மாவட்ட மைய நூலகத்தின் வளர்ச்சி குறித்து மாவட்ட மைய நூலகர் ரவி எடுத்துக் கூறினார்.

நூலகர் சிவாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நூலக பணியாளர்கள் ஆனந்த், கோமதி, மார்கரட் மேரி, சிவக்குமார், ஸ்ரீதர் மற்றும் நூலக வட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள், துணைத்தலைவர் ரமணன், புலவர் சோலூர் கணேஷ், தமிழ் செம்மல் விருது பெற்ற கவிதாயினி மணி அர்ஜுனன், அனுராதா ஹாலன், மதிமாறன் மற்றும் ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். நூலகர் பேபி நன்றி கூறினார்.

The post இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Book Day Festival ,Ooty ,World Book Day Festival ,Nilgiris ,District Central ,Library ,
× RELATED உலக புத்தக தின விழா