×
Saravana Stores

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு நிழற்பந்தல் வசதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று அதிகபட்சம் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. எனவே, பக்தர்களுக்கு வெயில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க தேவையான இடங்களில் நிகழ்பந்தல் வசதி ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். மேலும், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கள ஆய்விலும் ஈடுபட்டார.

அதன் எதிரொலியாக, இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அண்ணாமைலயார் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் தொடங்கி, மூன்றாம் பிரகாரம் வரை பல்வேறு இடங்களில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல், மாட வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்ததால், அந்த இடங்களிலும் நிழற்பந்தல் ஏற்படுத்தப்பட்டன.

அதனால், பல மணி நேரம் தரிசன வரிசையில் கடந்த சென்றபோதும், வெயிலின் பாதிப்பில் இருந்து பக்தர்கள் தப்பித்தனர். அதோடு, கோயில் முழுவதும் தரை விரிப்புகள் போடப்பட்டு, தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டன. அதேபோல், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நிழற்பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், பக்தர்களுக்கான வசதிகளை சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார் 5 கிமீ தூரம் வரை நடந்து சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, தரிசன வரிசையை விரைந்து அனுப்பவும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரைந்து தரிசனம் செய்யவும் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களுக்கு, விரைவு தரிசன முன்னுரிமை வழங்கப்பட்டது.

80 ஆயிரம் பச்சை வாழைப்பழம்

அண்ணாமலையார் கோயிலில் வரிசையில் நினறு தரிசனம் செய்த பக்தர்களுக்கு, ராஜகோபுரத்தில் தொடங்கி, மூன்றாம் பிரகாரம் வரை தொடர்ந்து குளிர்ந்த மோர், குடிநீர் பாட்டில், தர்பூசணி பழம் ஆகியவை தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டன. அதனை பக்தர்களுக்கு வழங்கி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது, கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், மீனாட்சிசுந்தரம், கோமதிகுணசேகரன், சினம்பெருமாள், கோயில் மேலாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு நேற்று ஒரே நாளில் 1.50 லட்சம் பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. அதேபோல், 80 ஆயிரம் பச்சை வாழைப்பழம் வழங்கப்பட்டன. மேலும், 2.25 லட்சம் குடிநீர் பாட்டில்கள், 60 ஆயிரம் லிட்டர் மோர் விநியோகிக்கப்பட்டது. தரிசனத்துக்காக வந்திருந்த குழந்தைகளுக்கு, 60 ஆயிரம் கடலை உருண்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், தரிசனம் முடிந்து வெளியே சென்ற பக்தர்களுக்கு திருமஞ்சன கோபுரம் அருகே, கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு வழங்கப்பட்டது.

தவித்த பாதங்களுக்கு தண்ணீர்

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கியது. எனவே, அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பகல் 11 மணியளவில் தார் சாலைகள் உருகும் நிைல ஏற்பட்டது. ஆனாலும், அதையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் மிதியடி இல்லாமல் கொதிக்கும் தார் சாலையில் நடந்து சென்றனர். ஒருசில பக்தர்கள் ஷாக்ஸ் அணிந்திருந்தனர்.

அப்போது, மாட வீதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், உடனடியாக நகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சாலையில் வெப்பத்தை தணிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி நேரடி மேற்பார்வையில் 3 லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மாட வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட பக்தர்கள் நடந்துசெல்லும் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தெளித்து, வெப்பத்தை தணித்தனர். அதனால், சுட்டெரித்த வெயிலில் தவித்த பக்தர்களின் பாதங்கள் ஆறுதல் அடைந்தன.

திருவண்ணாமலையில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1,800 தூய்மைப்பணியாளர்கள் இரவு, பகலாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். அதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தூய்மைப்பணியார்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

கிரிவலப்பாதையில் ஒரு கிமீ தூரத்துக்கு 100 தூய்மைப்பணியாளர் பணியில் ஈடுபட்டனர். இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர். பக்தர்கள் வீசிச்சென்ற குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.அதனால், கிரிவலப்பாதையில் நடந்து சென்ற பக்தர்கள், எவ்வித சிரமமும் இல்லாமல் செல்லும் நிலை காணப்பட்டது. கடந்த காலங்களில், கிரிவலம் முடிந்த பிறகே தூய்மைப்பணி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், நேற்று கிரிவலம் சென்றுகொண்டிருந்த போதே தொடர்ந்து இடைவிடாமல் தூய்மைப்பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.

தூய்மைப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ள இடத்திற்கே, அவர்களுக்கான உணவு, குடிநீர் போன்றவை கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தூய்மைப்பணியாளர்களின் உழைப்பை வியந்து பார்த்த பக்தர்கள், அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் பல இடங்களில் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

The post திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு நிழற்பந்தல் வசதி appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami ,Thiruvannamalai ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Bhaskara ,Pandian ,Chitra ,Pournami ,
× RELATED திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில் வழிபாடு..!!