×
Saravana Stores

மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மானாமதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் மானாமதுரையில் வீர அழகர் பச்சைபட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கிடையே ைவகை ஆற்றில் இறங்கினார். மானாமதுரை வீரஅழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்காக நேற்று முன்தினம் இரவு அழகர் கோயில் பின்புறம் உள்ள வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கொம்புக்காரனேந்தல் சேர்வைக்காரர் மண்டகப்படி உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் வைகை ஆற்றை கடந்து வீதி உலா வந்து தியாக வினோத பெருமாள் கோயிலை அழகர் சென்றடைந்தார். அங்கிருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கள்ளழகர் வேடம் பூண்டு பச்சைபட்டு உடுத்தி வெள்ளை குதிரை வாகனத்தில் மேல்கரை வழியாக சென்று காலை 7.50 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் இறங்கினார். பின்னர் ஆற்றினுள் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன் எதிரே வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் ஆயிரம்பொன் சப்பரத்தில் அழகரை வைத்து தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

விழாவில் சீனியப்பா அன்கோ உரிமையாளர்கள் சுப்பிரமணியன், ஜான் தினகரன், சீனியப்பா டிம்பர்டிரேடிங் உரிமையாளர்கள் நடராஜன், சுரேஷ், ஆனந்தகிருஷ்ணன் அன் கோ உரிமையாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், குணா(எ)குணசீலன், அருணாட்சி அம்மன் சேம்பர் உரிமையாளர்கள் நாகராஜன், ராஜேந்திரன், சண்முகம், லட்சுமணன் மகால் உரிமையாளர் அசோக்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், எஸ்ஐக்கள் பூபதிராஜா, பாலசதீஷ்கண்ணன், சந்தனகருப்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சர்பத், தர்ப்பூசணி, அன்னாசி பழங்கள் வழங்கப்பட்டன. புளியோதரை, பொங்கல், தயிர்சாதம் உள்ளிட்ட கலவை சாதங்களும் வழங்கப்பட்டன.

இதேபோல் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்.15 அன்று முகூர்த்தக்கால் நடப்பட்டு சித்ரா பவுர்ணமி விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை கோயிலில் இருந்து வெள்ளிக்குதிரையில் புறப்பட்ட அழகர் பல்வேறு இடங்களில் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 8.40 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்துடன் வெண்பட்டு உடுத்தி அழகர் பூவாளம் ஆற்றில் இறங்கினார். இரவு 9 மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோயில்கள் மற்றும் மண்டபங்களில் அழகர் காட்சிதருதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு இன்று இரவு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.

இன்று இரவு நிலாச்சோறு

மானாமதுரை சித்திரை திருவிழாவில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ‘நிலாச்சோறு’ சாப்பிடும் நிகழ்ச்சி இன்று இரவு வைகை ஆற்றுக்குள் நடைபெற உள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வைகை ஆற்றுக்குள் நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

The post மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர் appeared first on Dinakaran.

Tags : Manamadurai Vaigai River ,Veera Azhaka ,Manamadurai ,Chitrai festival ,Alaghar ,Vaigai river ,Veera Alaghar ,Govinda ,Manamadurai Veera Azakar Temple ,Veera Azakar ,
× RELATED தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்