×
Saravana Stores

மந்த நிலையில் நடந்து வரும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்

நெய்வேலி : சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி காரணமாக தொடர் விபத்துகள் ஏற்படுவதால் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கிய சாலையாக விளங்குகிறது. இச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடையும் போது சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரையிலான பயண நேரம் மிகவும் குறைவாக இருக்கும்.

இந்த வழித்தடத்தில் தொழில் மற்றும் உற்பத்தி துறையின் வளர்ச்சி மட்டுமின்றி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ள என்எல்சி ஆர்ச் கேட் வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய பங்கு வகிக்கின்றது.
இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வருகின்றன.

குறிப்பாக பண்ருட்டி, காடாம்புலியூர், கொள்ளுகாரன்குட்டை, வடக்குத்து, என்எல்சி ஆர்ச் கேட், கண்ணுதோப்பு பாலம் வரை சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் மேம்பாலத்திற்கு தேவையான தூண்கள், சிலாப்புகள் ஜல்லிகள், கம்பிகள் ஆகியவை சாலை ஓரத்தில் கிடப்பதால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வெளிச்சம் இல்லாததால் விபத்துகளில் சிக்கி பலர் உயிர் இழக்கும் நிலை உள்ளது.

இது போன்ற சாலை விபத்துக்களில் யாரேனும் சிக்கினால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது சாலை பணிகள் நிறைவு பெறாததால் நோயாளிகளை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சாலை விரிவாக்க பணிகள் நடக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கும் வகையில் குறைந்தபட்சம் காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்தலாம், என்றார்.

The post மந்த நிலையில் நடந்து வரும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Chennai-Thanjavur National Highway ,Dinakaran ,
× RELATED சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது