×

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து ஒப்புகை ச்சீட்டுகளையும் முழுமையாக எண்ண உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. EVM-ல் முறைகேடு நடைபெறலாம் என சந்தேகம் உள்ளதால் ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

தற்போது ஒவ்வொரு பேரவை தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டு மட்டுமே எண்ணப்படுகின்றன. மக்களவை தேர்தலில் EVM-ல் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளையும் ஒப்பீடு செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒப்புகைச்சீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் 5 கேள்விகள்

விவிபேட் மைக்ரோ கண்ட்ரோலர் தொடர்பாக சில சந்தேகங்கள் உள்ளதாக நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா கருத்து தெரிவித்துள்ளனர்.

* மைக்ரோ கண்ட்ரோலர் விவிபேடில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது கண்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா?

* பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கண்ட்ரோலர் கருவி என்பது ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக்கூடியதா?

* எத்தனை பேலட் யூனிட்டுகளில் சின்னங்கள் பொருத்தப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

* தேர்தல் தொடர்பாக 30 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்பதால் 40 நாட்களுக்குள் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்கு தொடர 45 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்படியானால் தரவுகள் சேமித்து வைக்கும் காலத்தை அதிகரிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

* கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? என விளக்கம் தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒப்புகைச்சீட்டு வழக்கில் ஆணைய அதிகாரி ஆஜராக ஆணை:

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள் முன் வைத்து விடைகாண விரும்புகிறோம். சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி, தங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரி 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் உறுதி அளித்தார்.

இதையடுத்து, வாக்கு இயந்திரங்களுடன் 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கு 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவுள்ளனர்.

The post விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : VIVIBET ,SUPREME COURT ORDERS ELECTION COMMISSION ,Delhi ,Supreme Court ,EVM ,Dinakaran ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...