×
Saravana Stores

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

*நூற்றுக்கணக்கானோர் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு

தென்காசி : குற்றாலம் மலைமீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நூற்றுக்கணக்கானோர் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். தீர்த்தவாரி வைபவம் இன்று (24ம் தேதி) நடக்கிறது. திருக்குற்றாலத்திற்கு இணையான அகஸ்தியர் அமர்ந்த மலையான பொதிகை மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 14ம் தேதி காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. அத்துடன் ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு 23 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் மதியம் உச்சிக்கால பூஜையும் நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு புனித விரதமிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமான பெண்கள் அவ்வையார் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்தும் வழிபட்டனர்.

இதில் தென்காசி டிஆர்ஓ பத்மாவதி, இன்ஸ்பெக்டர் உமா, அகஸ்தியர் சத்சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி, வக்கீல்கள் சண்முகசுந்தரம், சரவண சேதுராமன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, அதிமுக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இலஞ்சி சண்முகசுந்தரம், காசிமேஜர்புரம் ரத்தினசாமி, சுப்பிரமணியன், மணிகண்டன் மற்றும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

இதையொட்டி காலை முதல் இரவு வரை உபயதாரர்கள் மூலம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள், நள்ளிரவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரடுமுரடான பாதைகளில் நடந்து சென்று வழிபட்டனர். திருவிழாவில் இன்று (24ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் செண்பகாதேவி அருவியில் வைத்து அம்மனுக்கு தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அன்புமணி, உதவி ஆணையாளர் தங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

வனத்துறை சார்பில் மஞ்சப்பை விநியோகம்

சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் செண்பகாதேவி அம்மன் மலைக்கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்படி, வனச்சரக அலுவலர் சீத்தாராமன் மேற்பார்வையில் குற்றாலம் பிரிவு வனவர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை வழங்கினர்.

மேலும் கோயிலுக்கு வருகை தந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் பெற்று பேப்பரில் மடக்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். வனத்துறை சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. வயது முதிர்ந்தோர், இதய நோய், மூச்சு திணறல் உள்ளோரை கண்டறிந்து மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். நீர் மாசுபடுவதை தவிர்க்க ஆற்றிலோ, செண்பகாதேவி அருவியிலோ குளிக்க தடை விதித்திருந்தனர். இதனால் தண்ணீர் சுத்தமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Chitra Poornami Festival ,Courtalam Senpahadevi Amman Temple ,Chitra Pournami festival ,Senbhadevi ,Amman temple ,Koortalam hill ,Pongal ,Courtalam Senbhadevi Amman Temple ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...