×

இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்

*கழுகுமலை அருகே பரபரப்பு

கழுகுமலை : கழுகுமலை அருகே பட்டாக்குரிய இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி நேற்று சம்பந்தப்பட்ட சர்வே எண் இடத்தில் குடியேறும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியில் உள்ள மக்கள் 153 பேருக்கு 30.3.1993ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த இடங்கள், வருவாய்த்துறை மூலம் முறையாக அளந்து கொடுக்கப்படவில்லை.

இதனால் பட்டா வழங்கப்பட்டு, மக்கள் குடியிருப்புகள் கட்ட முடியாத நிலை உள்ளது. பழைய பட்டா ஆவணங்களை காண்பித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை தங்களது இடம் எனக் கூறி சிலர் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். இதுதொடர்பாக பட்டா பெற்ற மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பட்டா பெற்ற மக்கள், பட்டாக்குரிய சர்வே எண் உள்ள இடத்தில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் தலைமையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், கிளை செயலாளர் கருப்பசாமி மற்றும் கட்சியினர், பொதுமக்கள் அங்கு கூடி, ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், கழுகுமலை காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 93ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து, விரைவில் இடங்கள் அளந்து கொடுக்கப்படும் என வட்டாட்சியர் கூறினார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையடுத்து கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 3 மாத காலத்துக்குள் பட்டாக்களுக்கு உரிய இடங்கள் அளந்து வரைமுறைபடுத்தி கொடுக்கப்படும். அதுவரை பட்டா பெற்றவர்களும், எதிர் மனுதாரர்களும் சம்பந்தப்பட்ட இடத்துக்குள் வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalugumalai Kalgukumalai ,Karadikulam CR Colony ,Kalgakumalai, Thoothukudi district ,
× RELATED கழுகுமலை அருகே கார் மோதி தொழிலாளி பலி