டெல்லி: இஸ்லாமியர்களே அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் என பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு உள்நோக்கம் எழுந்திருக்கும் நிலையில் ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தை பொறுத்தவரை இந்து மற்றும் இஸ்லாமிய பெண்கள் இடையே 0.41 சதவிகிதமே வேறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை ஊடுருவியர்கள் என்றும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பெற்றவர்கள் என்றும் விமர்சித்தார்.
ஆனால் ஒன்றிய அரசின் தரவுகளின்படி இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது 2019-21 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 1.94ஆகவும், இஸ்லாமி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 2.36ஆகவும் உள்ளது. இரு மதத்திற்கும் இடையேயான குழந்தை பிறப்பு விகித வேறுபாடு 0.41 மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளாக இந்து, முஸ்லிம் என இரு மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் சரிவை சந்தித்துள்ளது.
1998-99 ஆண்டில் இந்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 2.78ஆக இருந்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் குழந்தை பெறும் விகிதம் 3.59ஆக இருந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் சரிவையே சந்தித்துள்ளது. கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தை சேர்ந்த பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதமும் சரிவை சந்தித்தாலும் இஸ்லாமியர்கள் குழந்தை பெறும் விகிதம் அதிக சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்து, முஸ்லிம்களுக்கும் இடையேயான குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தில் இருக்கும் வேறுபாடு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன்மூலம் குழந்தை பெற்று கொள்ளும் விகிதத்தில் இந்து, முஸ்லீம் இடையே பெரிய வேறுபாடு இல்லாதது உறுதியாகி இருப்பதுடன் மோடியின் பேச்சு உள்நோக்கம் கொண்டது என்பதும் அம்பலமாகி இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
The post இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு உண்மையா?.. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறும் தகவல்..!! appeared first on Dinakaran.