திண்டிவனம் : திண்டிவனம் நீதிமன்றத்தில் தேனீக்கள் கடித்து வழக்கறிஞர்கள், போலீஸ் உள்பட 15 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நீதிமன்றம் காலை 10 மணிக்கு பரப்பரப்புடன் இயங்கியது. அங்குள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிமன்றம் ஜன்னல் பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அருகே தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இந்தக் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென பறந்து வந்து நீதிமன்றத்தில் இருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்து ஓடினர். இதில் வழக்கறிஞர்கள் குமார் (55), சீனுவாசன் (49), மாதவன் (32), அருள்மணி (39), தேசிகன் (29), திருநாவுக்கரசு (28), விக்னேஷ் (29), கோர்ட் ஊழியர்கள் சோலை (55), கலைவாணி(51), வேலு(60), நீதிமன்ற போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ரங்கநாதன் (52), வழக்குக்காக வந்தவர் ராமமூர்த்தி (36), ராதாகிருஷ்ணன் (55), கோவிந்தன் (38), பொன்னம்மாள் (50) உட்பட 15க்கும் மேற்பட்டோர் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இதுகுறித்து திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தேனீக்களை அழிக்கும் மருந்தை பீயச்சி அடித்து தேன் கூட்டை முழுவதுமாக அழித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு தேனீக்கள் கடித்து வழக்கறிஞர்கள், போலீஸ் உள்பட 15 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.