டெல்லி: 100 சதவிகித விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஏ.டி.ஆர் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் இயந்திரங்களில் பதிவான அனைத்து வாக்குகளையும் எண்ணி. வாக்குப் பதிவு இயந்திர வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இதேகோரிக்கையுடன் சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் மற்றும் தனியார் அமைப்புகளும் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, VVPAT இயந்திர செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். வாக்குகள் பதிவாவதற்கும், எண்ணப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை என்றும் தேர்தல் விதிமுறைகள் எந்த அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்பதால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. 2 நாட்கள் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலம் நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.