ஜெயங்கொண்டம், ஏப்.24: அரியலூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான சின்னங்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில் பழங்கால சிலை ஒன்று உள்ளதாக ஜெ.தத்தனூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பெயரில் அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணியன், கலியமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த பகுதிகளின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர் அதன்படி உடையார்பாளையம் அருகில் கீழவெளி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் மண்ணில் சாய்ந்தபடி ஒரு பலகை கல்லிலான குறுஞ்சிற்பம் காணப்பட்டது. அந்த சிற்பத்தை ஆய்வு செய்த போது அதில் கட்டப்பட்டுள்ள அணிகலன்கள் வைத்து பார்க்கையில் இச்சிற்பம் கிபி.
7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் காலத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும், சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பம் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மண்ணில் சாய்ந்த படியே உள்ளது. அதனால் இந்த சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.
அப்பகுதி மக்களுக்கு இது பற்றிய விவரம் எதுவும் தெரியாததால் பொதுவெளியில் வேப்ப மரத்திற்கு கீழே இந்த அய்யனார் சிற்பத்தை அப்படியே வைத்து வழிபட்டு வருகின்றனர்.வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் மதுரை வீரன், பூபதி, கோவிந்த், யுவராஜ், ரங்கதுரை, ரவீந்திரன், வடிவேல், கண்ணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இந்த மேற்பரப்பு கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.