சென்னை: வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இருக்கிறதா, இல்லையா? என்ற விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்குத்தான் அதிக பொறுப்பு இருப்பதாகவும், பொதுமக்களும் முன் கூட்டியே பட்டியலில் பெயர் உள்ளதா என்று பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி (வெள்ளி) நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். இவர்களில் 69.72 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். அதன்படி சுமார் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. இது தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசும் பொருளாக உருவாகியுள்ளது. இது கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தைவிட 2.31 சதவீதம் குறைவு. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாக்கு சதவீதம் குறைந்ததற்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு என்பதால் பலரும் வெள்ளி, சனி, ஞாயிறு வெளியூர் அல்லது சுற்றுலா சென்றது காரணமாக கூறப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என்கின்றனர். இதுதவிர முக்கிய காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக சென்னை, கோவை உள்ளிட்ட பல நகர்ப்புற பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற புகார் கூறப்படுகிறது.
இதில் ஒரு சில பகுதிகளில் மொத்தம் மொத்தமாக நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுவும் வாக்குப்பதிவு குறைவுக்கு ஒரு காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதை தலைமை தேர்தல் அதிகாரி மறுத்தார். இந்த குளறுபடிகளுக்கும் காரணம் தேர்தல் ஆணையமா, அரசியல் கட்சிகளா, பொதுமக்களா? என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இதுபோன்ற தவறுகளுக்கு எல்லோருமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, யார் யார் பெயர் நீக்கப்பட்டுள்ளது, யார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று விரிவாக அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையம் வழங்கும் பட்டியலை வாங்கி பழைய பேப்பர் கடைக்கு போட வைத்திருக்கிறார்களா அல்லது அதை பயன்படுத்த வைத்திருக்கிறார்களா? தேர்தல் ஆணையமும், ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்போது ஒரு தடவைக்கு இரண்டு தடவை சரி பார்க்க வேண்டும்.
அதை தேர்தல் ஆணையம் கவனமுடன் கையாள வேண்டும். அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையம் அளிக்கும் பட்டியலை வைத்து வீடு வீடாக ஆய்வு செய்திருக்க வேண்டும். தேர்தல் நடந்து முடிந்த பிறகு பெயரை நீக்கி விட்டார்கள் என்று மட்டுமே சொல்வது அரசியல் கட்சிகள் வேலை இல்லை. பொதுமக்களும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தேர்தலுக்கு முன்பே பார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பெயர் நீக்கியதற்கான காரணம், நம்பர் ஒன் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது என்றால், நம்பர் 2 பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. ஓட்டு போடும் அன்று, கையில் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் வந்தார்களா, இல்லையா? என்று பார்க்கிறீர்கள். அப்படியென்றால் அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா? என்று தேர்தலுக்கு முன் அரசியல் கட்சியினர் பார்த்திருக்க வேண்டும். பெயர் இருக்கிறவர்கள் தான் ஓட்டு போட வருவார்கள்.
அப்படியென்றால் பெயர் இருக்கிறதா என்று முன்பே பார்த்திருக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமல் இருக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் அவரவர் வேலையை சரியாக செய்ய வேண்டும். ஒரு தடவை வாக்காளர் அடையாள அட்டை வாங்கி விட்டால் அந்த கார்டு எப்போதும் நம்மிடம் தான் இருக்கும். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முக்கியம். அதனால் இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு கூறினார்.
The post வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து appeared first on Dinakaran.