×
Saravana Stores

போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம், டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லைப் பகுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று முதல் வரும் 30ம் தேதி வரை போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் தரப்பில் அனுமதி கேட்டனர். ஆனால் அதனை நிராகரித்த அதிகாரிகள் இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி உள்ளனர்.

இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் அங்கிருக்கும் மரத்தடி பகுதியில் நேற்று ஓய்வு எடுத்து வந்தனர். அப்போது அங்கு வந்த துணை ராணுவ அதிகாரிகள், உங்களுக்கு நாளை (இன்று) தான் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால் ஜந்தர் மந்தரில் தங்க உங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். ஆனால் அதனை தமிழ்நாடு விசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர். மேலும் நாங்கள் அமைதியாக தானே இருக்கிறோம்.

போராட்டம் எதுவும் நடத்தவில்லையே, எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினர். இதனால் துணை ராணுவ படையினருக்கும், தமிழ்நாடு விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அது தள்ளு முள்ளாக மாறியது. அப்போது துணை ராணுவ அதிகாரி தமிழ்நாடு விவசாயி ஒருவரை நெஞ்சில் கை வைத்து வேகமாக கீழே தள்ளிவிட்டார்.

இதனால் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த மற்ற விவசாயிகள், துணை ராணுவ அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுது அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் கிளம்பி சென்றனர். துணை ராணுவ அதிகாரிகள் தாக்கியதில் தமிழ்நாடு விவசாயிகள் மூன்று பேர் காயமடைந்தனர்.

The post போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம், டெல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Army ,Tamil Nadu ,Delhi ,New Delhi ,
× RELATED ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு