ஒடுகத்தூர், ஏப்.24: ஒடுகத்தூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக மனைவி நேற்று தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும், 90 சதவீத தீ காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(44), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா(35), இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். குடி பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் நாள்தோறும் குடித்து விட்டு தனது மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், குடும்ப செலவிற்கு கூட ரமேஷ் பணம் தருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனாலேயே, தீபா மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று கிராமத்தில் கொடகாத்தம்மன் திருவிழா தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் ரமேஷ் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, நல்ல நாள் என்று பார்க்காமல் இப்படி குடித்து விட்டு வருகிறாயே என்று தீபா தனது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனவேதனயடைந்த தீபா வீட்டில் உள்ள அறைக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர்.
மேலும், உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்ட அவரை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, 90 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒடுகத்தூர் அருகே குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post குடும்ப பிரச்னையால் பெண் தீக்குளிப்பு 90 சதவீத காயத்துடன் தீவிர சிகிச்சை ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.