×

விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம்: இரட்டைக் கொலை வழக்கில் வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி, அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே கண்ணராம்பட்டு பகுதியைச் சேர்ந்த குலசேகரன் (59). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நக்கீரன் என்பவரின் குடும்பத்திற்கும் புறம்போக்கு இடத்தை அனுபவித்து வருவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நக்கீரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் போட்டியிட்டனர். இதில் சேகர் தரப்புக்கு ஆதரவாக குலசேகரன் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நக்கீரன்(49), அவரது ஆதரவாளர்கள் வழக்கறிஞர் கோவிந்தராஜ்(65), தமிழ்மணி(47), சிவபூஷ்ணம்(65), புகழேந்தி(78), மணவாளன்(75), ராஜேந்திரன்(65), குமரவேல்(52), மார்க்கண்டேயன்(65), சுதாகர்(46), பழனிவேல்(58), முரளி(44), தமிழ்ச்செல்வன்(55), அருள்(44), கனகராஜ் (75), மோகன்(47), சிவநாதன்(45), பிரபு, காளிபசுபதி, அர்ஜுனன்(75), மணி(78), பாரி(41), பார்த்திபன்(45), சபரிநாதன்(50), கண்ணன்(65), மாதவன்(50) உள்ளிட்ட 26 பேரும் சேர்ந்து குலசேகரனை தாக்கி கொலை செய்தனர்.

மேலும் தடுக்க வந்த அவரது உறவினர் காத்தவராயன் (70) என்பவரையும் தாக்கி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் 26 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது பழனிவேல், தமிழ்மணி, அருள், தமிழ்செல்வன், அர்ஜுனன், கண்ணன் ஆகிய 6 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ராஜி சிம்மவர்மன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். ஆயுள்சிறை தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைதண்டனை விதிக்கப்பட்ட கோவிந்தராஜ் வழக்கறிஞராகவும், மோகன் கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீசாராகவும், சிவநாதன் அதிமுக கிளை செயலாளராகவும், சபரிநாதன் பொதுப்பணித்துறை தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

The post விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vilupuram ,Vilaupuram ,Viluppuram ,Viluppuram Additional District Session Court ,Kannarampattu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 10-ம் தேதி...