×
Saravana Stores

5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்

கும்பகோணம்: குடந்தையில் 5 அடி பள்ளத்தில் சாரங்கபாணி தேர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள வைணவ கோயில்களில் 12வது தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரை தேர் திருவிழா சிறப்புடையது. இந்த கோயிலின் பெரியதேர் தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களிலேயே 3வது பெரியதேர் என்ற சிறப்பை பெற்றது.

திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 110 அடி உயரமும், 47 அடி அகலமும், 500 டன் எடை கொண்ட பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதைத்தொடர்ந்து தேரோட்டம் காலை 7 மணியளவில் தேரடியில் இருந்து புறப்பட்டது. தேரோட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘சாரங்கா, சாரங்கா’ கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடியில் இருந்து புறப்பட்ட தேர், சாரங்கபாணி கீழ வீதியை கடந்து 10.20 மணியளவில் தெற்குவீதி வழியாக ராமசாமி கோயில் அருகே தேர் வந்த போது தேரின் முன்பகுதியில் உள்ள இடது புற சக்கரம், சாலையில் இருந்த 5 அடி பள்ளத்தில் ஒன்றரை அடி ஆழத்திற்கு திடீரென இறங்கி சிக்கியது.

இதனால் தேரோட்டம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தேரோட்ட பணியாளர்கள், பெரிய ஜாக்கிகளை கொண்டு தேரின் சக்கரம் மேலும், பள்ளத்தில் இறங்காமல் இருக்க தேரை தரைமட்டத்திற்கு உயர்த்தினர். பள்ளத்தில் இருந்து மீட்க சம்பவ இடத்திற்கு உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர், முன்சக்கரத்தை இயந்திரங்கள் உதவியோடு தூக்கி நிறுத்தினர். சாலையில் திடீர் ஏற்பட்ட பள்ளத்தில் பெரிய கருங்கல், ஜல்லி கற்கள், சிமெண்ட் கலவைகள் கொண்டு நிரப்பப்பட்ட பின்னர், தேரின் சக்கரங்கள் ஓட ஏதுவாக, பள்ளத்தின் மீது பெரிய தடிமனான ஒரு இரும்பு பிளேட்டை வைத்து அதற்கான பணிகளை விரைவுபடுத்தினர். பின்னர் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் பிற்பகல் 12.15 மணியளவில் தேரோட்டம் மீண்டும் தொடங்கியது.

The post 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர் appeared first on Dinakaran.

Tags : Sarangapani ,Kumbakonam ,Kudantai ,Kumbakonam, Thanjavur district ,Srirangam ,Tirupati ,Vaishnava ,Cholanath ,
× RELATED ராஜகோபுர தரிசனம்! : சாரங்கபாணி கோயில்