- சித்ரா பவுர்ணமி விழா
- திருவண்ணாமலை
- கிரிவலம்
- திருவண்ணாமலை
- சித்ரா பௌர்ணமி விழா
- கிரிவலம்
- அண்ணாமலை கோவில்
- திருவண்ணாமலை,
- Kolagalam
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக கூட்டம் அலைமோதியது. இதனால் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில்.
அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாகவும், உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரராகவும் இறைவன் எழுந்தருளிய தனிச்சிறப்பு மிக்க திருத்தலமாகும். உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்தரும் திருவண்ணாமலையில் காட்சிதரும் மலையே மகேசன் திருவடிவம். எனவே, பவுர்ணமி நாட்களில் அண்ணாமலையை வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். அதில், ஆண்டுதோறும் கிரிவலம் சென்ற நிறைவையும், பலனையும் அளிப்பது சித்ரா பவுர்ணமி கிரிவலம். சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் சென்றால், எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
இந்நிலையில், பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் மாட வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலை 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 11 மணிவரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன்பிறகு, வெயில் சுட்டெரித்ததால், பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. பின்னர், நேற்று மாலை வெயில் தணிந்ததும் மீண்டும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
இதனால் கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பக்தர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நீர், மோர், பழச்சாறு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
The post திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.