×
Saravana Stores

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று கோவிந்த கோஷங்கள் விண்ணை பிளக்க தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் அழகர் இறங்கினார். இதை 10 லட்சம் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22ம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. வைகையாற்றில் அழகர் இறங்கும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு, கடந்த 21ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார்.

கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார். பின்னர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்பட்டார். அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு அழகர் வந்தார்.

அதிகாலை 4 மணிக்கு வீரராகவ பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் காத்திருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த அழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார். வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென கூடி இருந்தனர். வைகை ஆற்றின் கரையோரம், ஆற்றுப்பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் தலைகளே தென்பட்டன. வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் பச்சைப்பட்டு உடுத்தி, மதுரை வைகையாற்றில் காலை 6.02 மணிக்கு இறங்கினார்.

அப்போது அங்கு கூடி இருந்த சுமார் 10 லட்சம் பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி அழகருக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். வைகை ஆற்றில் இறங்கிய அழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.41 மணிக்கு புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார். பகல் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளினார்.

* 27ம் தேதி மலைக்கு திரும்பும் அழகர்
அழகர் நாளை காலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 26ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 27ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் இருப்பிடம் அடைகிறார். 28ம் தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

* மண்டூக முனிவருக்கு இன்று சாப விமோசனம்
இன்று காலை 6 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில், அழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில், 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோயிலுக்கு அழகர் வருகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

* இளைஞர்களுக்கு நூதன தண்டனை
மதுரையில் அழகர் இறங்கும் வைகையாற்றில் போலீசார் ட்ரோன் கேமராவை இயக்கி நேற்று அதிகாலை கண்காணிப்பு, பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த லேசர் லைட் மூலம் அந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தின் மீது தொடர்ந்து அடித்துக் காட்டி காட்சிகள் பதிவில் பாதிப்புடன், கண்காணிப்பிலும் சிரமத்தை ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர்களை வளைத்துப்பிடித்த போலீசார் லேசர் லைட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் தரையில் அமர்ந்து இடுப்பில் கை வைத்து ஒரு கால் ஊன்றியபடி தாவித்தாவி நடக்க வைத்து அந்த இளைஞர்களுக்கு நூதனத் தண்டனை வழங்கி, கண்டித்து, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

The post பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Alaghar ,Vaigai river ,Madurai ,Madurai Chitrai festival ,Vaigayaar ,Govinda Koshangal ,Dinakaran ,
× RELATED மதுரை முழுவதும் மழைநீர் தேக்கம்...