×

கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி பக்தர்கள் இன்று காலை முதல் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வதமலையில் பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. தென்கைலாயம் என அழைக்கப்படும் இங்கு மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 23 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி இன்று சித்ரா பவுர்ணமியொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

கலசப்பாக்கம் அடுத்த கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கடலாடி, பட்டியந்தல், வெல்லந்தாங்கீஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக கிரிவலம் சென்று பின்னர் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சக்தி கயிறு கட்டிக்கொண்டு மலையேற தொடங்கினர். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தால் பகைவரை எளிதில் வெல்லலாம் என்பது ஐதீகம்.

மலையேறும் பக்தர்களுக்கு வீரபத்திரன் கோயிலில் அன்னதானம் மற்றும் கஞ்சி வழங்கப்பட்டன. மேலும் மலையடிவாரத்தில் பக்தர்களை, வனத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர். அதேபோல் கிரிவல பாதையிலும் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டது. பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மாலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami Krivalam ,Kalasapakkam ,Chitra Pournamioti ,Krivalam ,Brahmarambikai Amman Sametha Mallikarjuneswarar Temple ,Tenmakadevamangalam ,Tiruvannamalai District Galasapakkam ,Galasapakkam ,
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...