இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு அனைவரும் அச்சப்படுகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது குறித்தும், ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறியதாவது:
புவி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் கடும் வெப்பத்தின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள், கைக்குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் கடும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தங்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த, காலக்கட்டத்தில் ஒருவர் போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், அவரது உடலின் நீர்சத்து வெகுவாக குறைந்துவிடும். இதன் காரணமாக உங்கள் உடலின் சூடு அதிகரிக்கும். இந்த சூடானது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. உடலால் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இது ஏற்படுகிறது. வெப்பநிலை 103 டிகிரிக்கு மேல் உயரும்போது, உடலை குளிர்விக்க முடியாமல் போகும்போது, தோல் சிவந்து வறண்டு போகும். அதிக சூடு காரணமாக தலை வலி, குமட்டல், தலைச்சுற்றல், வலிப்பு, தசை இழுப்பு மற்றும் குழப்பம் மற்றும் சில நேரங்களில் சுயநினைவு இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளியேறுகிறது. இதன் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படும்.
வெப்ப அழுத்தம் என்பது உடல் குளிர்ச்சியடையாமல் இருப்பதாகும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வையானது தொடர்ந்து அப்படியே இருப்பதால் அது காய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். வெப்ப சோர்வு என்பது உங்கள் உடல் அதிக வெப்பமடையும்போது ஏற்படும் ஒரு நிலை மற்றும் வெப்பம் தொடர்பான மூன்று நோய்களில் ஒன்றாகும், வெப்ப பிடிப்புகள் லேசானவை மற்றும் வெப்ப பக்கவாதம் மிகவும் தீவிரமானது. கடுமையான வியர்வை உடலில் சொறி சிரங்கு, தோல் சிவத்தல், வலிமிகுந்த சிவப்பு கொப்புளங்கள், தோலில் தடிப்புகள் அரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இவை பொதுவாக மார்பு, முதுகு மற்றும் கைகளில் ஏற்படுகின்றன. நீண்டநாள் சுவாசம் மற்றும் இருதய நோய் மற்றும் ரத்த குழாயில் பிரச்னை உள்ளவர்களுக்கு கடும் வெயில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதன் முற்றிய நிலை மரணத்திற்கும் வழிவகுக்கிறது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவை வெப்பத்தின் காரணமாக ஏற்படலாம். எனவே, இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். உடலில் நீர்சத்தை பராமரிக்க அதிகளவு தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும், உடலுக்கு நீர்சத்தை தரும் பானங்கள், மோர், தேங்காய் துருவல் போன்றவற்றை சாப்பிடலாம். காபி, ஆல்கஹால் உள்ளிட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது. உடலை இறுக்கிப்பிடிக்காத தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
கடும் வெயிலில் உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் போன்ற வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்கவும். விளையாட்டு மற்றும் வெளியே செல்ல வேண்டிய வேலைகள் இருந்தால், அவற்றை மாலை வேளையில் செய்வதற்கு திட்டமிடுங்கள். விளையாட்டு வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எளிதாக ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. சன்கிளாஸ், தொப்பி, குடை மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மின்விசிறி, ஏர் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மால்கள் அல்லது குளிர்ச்சியான இடங்களில் இருப்பது நல்லது. நீச்சல் குளத்தில் குளிப்பது என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மரங்களை நடுவது சுற்றுச்சூழலை குளிர்விக்க உதவுகிறது, மரங்களை வெட்டி இயற்கையை அழிக்கக்கூடாது. கோடை காலங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மண் பானைகள் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
எனவே, மக்களின் தாகம் தணிக்க ஒவ்வொரு இடங்களிலும் மண் பானைகளில் தண்ணீர் வைத்தால், இந்த கோடை காலத்தில் மிகவும் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது அவசியம்: மருத்துவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.