- கோவகம் கோத்தந்தவார் கோயில்
- உளுந்தூர்பேட்டை
- கோவகம் கோத்தன்வர் கோயில் சித்ர திருவிழா
- கள்ளக்குறிச்சி
- கோவகம் கோத்தன்வார் கோயில்
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழாவில் கோடை வெயில் தாக்கம் காரணமாக காலையிலேயே பூசாரி கையால் திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு வழிபட்டனர். இன்று மாலை நடக்கும் விழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள். நாளை சித்திரை தேரோட்டம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை பெருவிழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள், பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 9ம் தேதி அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி முதல் மகா பாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும், 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு மற்றும் சுவாமி வீதியுலாவும், 21 ஆம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெற்றது. நேற்று 22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி கும்மி அடித்து விடிய விடிய ஆடிப்பாடி மகிழ்வார்கள். நாளை ஏப்ரல் 24ம் தேதி காலை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
இன்று மாலை திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாக வயதான திருநங்கைகள் மற்றும் உடல் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இன்று காலையிலேயே கோயிலுக்கு வந்து மஞ்சள் கயிறு வாங்கி பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கூத்தாண்டவரை பயபக்தியுடன் வழிபட்டு சென்று வருகின்றனர்.
குறைந்த அளவிலே திருநங்கைகள் வந்திருந்தாலும் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தான் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்ள உள்ளனர். பக்தர்களும் அதிக அளவில் வருவார்கள்.
இதற்காக கோயில் அருகில் மஞ்சள் கயிறு, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்டவை விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் போடப்பட்டுள்ளது.
The post கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி கையால் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்: நாளை சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.