×
Saravana Stores

கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு

நாமக்கல்: கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோழிப்பண்ணைகள் அதிகம் நிறைந்த நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோழிப்பண்ணைகளை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 47 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினமும் பல்வேறு கோழிப்பண்ணைகளுக்கு சென்று கோழிப்பண்ணைகளை கண்காணித்து உரிய அறிவுரை அளிப்பார்கள். மேலும் கோழிகளின் ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வகத்துக் அனுப்பி வைத்து பரிசோதனை முடிவின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், `நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை தடுக்க வேண்டும். அனைத்து கோழிகளையும் உற்பத்தி முடிந்து, கழிவு செய்த பின்னரே புதிதாக குஞ்சுகள் வாங்க வேண்டும். பண்ணையில் மனித நடமாட்டம் மிக குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். பண்ணையில் உள்ள ஒரு கொட்டகையில் இருந்து மற்றொரு கொட்டகைக்கு வேலை ஆட்கள் செல்லக்கூடாது.

கோழிப்பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் மீது கிருமி நாசினிகளை விதை தெளிப்பான் மூலம் தெளித்த பிறகே பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பண்ணை வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பல்வேறு வகை பறவையினங்களை ஒரே பண்ணையில் வைத்து பராமரிப்பதை தவிர்க்க வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது` என்றனர்.

The post கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Namakkal ,Animal Husbandry Department ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும்,...