×

அச்சரவாக்கத்தில் நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

திருப்போரூர், டிச.6: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய செம்பாக்கம் ஊராட்சியில் அச்சரவாக்கம் கிராமம் உள்ளது. இங்கு 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர், விவசாயக்கூலிகளாக மிகவும் வறிய நிலையில் உள்ளனர். அச்சரவாக்கம் கிராமத்தில் அரசு மேயக்கால் புறம்போக்கு நிலத்தை சீர் செய்து விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அண்மையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த நிலத்தை ஆய்வு மற்றும் அளவீடு செய்தனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வரும் 200க்கும் மேற்பட்டோர் நேற்று செம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத்தலைவர் லதா கலாநிதி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். தாங்கள் மூன்று தலைமுறைகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருவதாகவும், இந்த நிலங்களை அரசு ஆக்கிரமிப்பு மீட்பு என்ற பெயரில் எடுத்துக் கொண்டால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் தெரிவித்து நிலமில்லாத விவசாயிகளுக்கு இந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து அந்த மனுவில் கூறி இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் சரவணன் இதுகுறித்து திருப்போரூர் வட்டாட்சியர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பரிந்துரைத்து வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். …

The post அச்சரவாக்கத்தில் நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Acharavak ,Tiruporur ,Acharavakkam ,Sembakkam panchayat ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...