*உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு
திருப்பத்தூர் : குரிசிலாப்பட்டு அருகே சாராயம் விற்று வருவதாக வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் சந்திரசேகரன்(38). இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் காரணமாக மதுபான கடைகள் விடுமுறையில் இருந்த நேரத்தில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் நேற்றும் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து வந்ததாக கூறி, குரிசிலப்பட்டு போலீசார் சந்திரசேகரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.சந்திரசேகரன் சாராயம் விற்பனை செய்ததாக இதற்கு முன்பு 3 முறை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக அவர் மீது போலீசார் தரப்பில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த குடும்பத்தினர் சந்திரசேகரன் சாராயம் விற்பனை செய்யவில்லை எனக்கூறினர். மேலும் அவருக்கு வயிற்றில் பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.
எனவே அவர் ஒரு நோயாளி அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக்கூறி திருப்பத்தூர் வழியாக மிட்டூர் செல்லும் சாலை குரிசிலப்பட்டு காவல் நிலையம் முன்பு நேற்று திடீரென
மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்கவும் குடும்பத்தினர் முயற்சித்தனர்.
உடனே, போலீசார் கேனை பிடுங்கி எறிந்து குரிசிலப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், ஸ்டேஷன் பெயிலில் சந்திரசேகரனை போலீசார் விடுவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று வருவதாக வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்ததை எதிர்த்து தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.