காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில் எதிரொலியாக ஏரிக்கால்வாயில் ஆர்வமுடன் சிறுவர்கள் மீன் பிடிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடைக்கால வெயில் தொடங்கும் முன்பே, அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தில் 105-டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகின்றன. இதன்காரணமாக பொது மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு, மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மோர், இளநீர், தர்பூசணி, உள்ளிட்டவைகளை நாடி செல்கின்றனர். இந்நிலையில், காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை பகுதியில் இருந்து அய்யம்பேட்டைசேரி பகுதி செல்லும் வழியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இந்த விவசாய நிலங்களுக்கு காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாயில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் காரணமாக இந்த ஏரிக் கால்வாயில் தண்ணீர் வரத்து நின்றதால், கால்வாயில் தண்ணீர் வற்றி உள்ளது. இதனால் எஞ்சியுள்ள நீரில் வரும் மீன்களை, இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஆர்வமுடன் பிடித்து செல்கின்றனர்.
The post காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில் எதிரொலி ஏரிக்கால்வாயில் எஞ்சிய நீரில் ஆர்வமுடன் மீன் பிடிக்கும் சிறுவர்கள் appeared first on Dinakaran.