×
Saravana Stores

சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இளநீர் உற்பத்தி குறைவு

*வெளியூர்களுக்கு அனுப்புவதில் தட்டுப்பாடு

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்படும் செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இளநீர் உள்ளிட்டவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும் அந்த நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையாலும் இளநீர் விலை மிகவும் சரிந்தது. மேலும், இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை தொடர் பனிப்பொழிவு காரணமாகவும் இளநீர் விற்பனை மந்தத்தால் ஒரு இளநீர் பண்ணை விலை ரூ.17ஆக சரிந்தது.

அதன்பின், பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கத்தால், இளநீரின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்துக்கும் பொள்ளாச்சியிலிருந்து இளநீர் அனுப்பி வைக்கும் பணி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதிலும், கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், வெளியிடங்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கப்படுவது மேலும் அதிகரித்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் வரையிலான இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இளநீருக்கு தொடர்ந்து கிராக்கியால் இந்த மாதம் துவக்கத்தில் தோட்டங்களில் நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.37 வரை உயர்ந்தது. ஆனால், கடந்த சில மாதமாக மழையின்றி வெயிலின் தாக்கமே அதிகரித்தது. போதிய தண்ணீர் இல்லாமல், பல இடங்களில் தென்னைகள் வாடி வதங்கியதுடன் இளநீர் உற்பத்தி குறைந்தது.பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இளநீர் உற்பத்தி குறைவு காரணமாக, அதன் தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. பல தென்னைகளில் குறும்பல் போன்ற இளநீரால் அதனை, விவசாயிகள் பரிப்பதை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் இதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சம் வரையிலான இளநீர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு தட்டுப்பாடின்றி அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் உற்பத்தி குறைவு காணரமாக, கடந்த ஒரு வாரமாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 75 ஆயிரம் வரையிலான இளநீரே வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.

இளநீர் தட்டுப்பாடு காரணமாக, உற்பத்தியான இளநீரை தேவைக்கேற்ப அனுப்பும் பணி நடக்கிறது. இளநீர் தட்டுப்பாடு இருப்பதால், அதற்கு மேலும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு இளநீர் மொத்த விலை ரூ.38ஆக நிர்ணயம் செய்ய்பட்டுள்ளது எனவும், தென்னையில் இளநீரின் காய்ப்புத்திறன் மேலும் குறைந்தால் வரும் வாரங்களிலிருந்து மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

The post சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இளநீர் உற்பத்தி குறைவு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Anaimalai district ,Coimbatore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற...