×
Saravana Stores

கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்

*ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

*கடைகோடி குடியிருப்புக்கும் கிடைக்க வேண்டும்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கடைகோடி குடியிருப்புக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தியுள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடைகோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திடவும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் தொய்வின்றி கிடைக்கவும் பணியாற்றிட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை தினசரி உறுதி செய்திடும் வகையில், குடிநீர் தேவைகள் நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் மூலமாக 14 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான அளவு குடிநீர் 4.21 மில்லியன் லிட்டர் அளவு தினசரி வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் சீரான அளவில் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மூலம் கோடை காலத்திலும் மின்தடை இல்லாமல் வழங்க மின்வாரியம் மாற்று ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என கண்டறியப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டம் முன்னேற்பாடுகள் குறித்து வரைவு திட்டம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்று குடிநீர் ஆதாரம் ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் உடன் குடிநீர் வழங்க தொடர்புடைய உள்ளாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

முறைகேடான இணைப்புகளை உடனடியாக துண்டியுங்கள்…

விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேடான குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டுமென ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். முறைகேடான குடிநீர் இணைப்பு உள்ளதை கண்டறிந்து துண்டித்தல், கூடுதல் குடிநீர் தேவையுள்ள பகுதிகளை கண்டறிந்து, லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரின் தேவை மற்றும் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றார்.

The post கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Kadaikodi ,Villupuram ,Collector ,Palani ,Kadakodi ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது