ஊட்டி : கோடை சீசன் காரணமாக ஊட்டி களைகட்டியுள்ள நிலையில் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதால் ஊட்டி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுனஸ்கோ அமைப்பு நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்படும் கோடை சீசன்,செப்டம்பர் அக்டோர் மாதங்களில் கடைபிடிக்கப்படும் போது சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரக் கூடிய சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்வார்கள். ஊட்டி – குன்னூர் – மேட்டுபாளையம் இடையேயும், குன்னூர் – ஊட்டி இடையேயும் நாள்தோறும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து கடந்த மாத 29ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. முழுவதும் முன்பதிவு செய்து இயக்கப்படும் ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
இதனால் மலை ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணிக்கின்றனர். வரும் நாட்களில் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.