- தேவிபட்டினம் காளியம்மன் கோவில்
- சிவகிரி
- தேவிபட்டினம் காளியம்மன் கோவில்
- தட்டாங்குளம்
- காளியம்மன் கோயில்
- Devipatnam
- காளியம்மன்
- தென்காசி மாவட்டம்
*விரைவில் அகற்றப்படுமா?
சிவகிரி : தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை விரைவில் அகற்றப்படுமா? என பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் தட்டாங்குளம் காளியம்மன் கோயில் உள்ளது. தென்காசி மாவட்டத்திலேயே மிகப்பெரிய காளியம்மன் சிலை அமைந்துள்ள இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து தங்கி அம்மனை வணங்கி செல்கின்றனர்.
இக்கோயிலுக்கு மேற்குபுறத்தில் புனித இடமாக கருதப்படும் தட்டாங்குளமானது கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து பெய்த அதி கனமழையால் பெருக்கெடுத்த தண்ணீரால் முற்றிலும் நிரம்பியது. ஆனால், முறையான பராமரிப்பின்றி தற்போது இக்குளத்தை அமலைச் செடிகள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இவ்வாறு அமலைச் செடிகள் குளம் முழுவதும் பெருகிவிட்டதால் யாரும் குளத்திற்குள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா காலக்கட்டங்களில் இந்த குளத்தில் இருந்து தான் தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில் ‘‘கோயில் குளத்தில் அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் குளத்திற்குள் பக்தர்களால் செல்ல முடியவில்லை. மேலும் பொதுமக்கள் சிலர் துணியை கொண்டு வந்து அலசி தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். விழா நாட்கள் தவிர மற்ற காலகட்டங்களில் கோயிலுக்கு பலர் வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் போதிய சுகாதார வசதியில்லாமல் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். எனவே குளியல் அறையுடன் கூடிய கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்’’என்றனர்.
The post தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.