- சித்ரா பவுர்ணமி விழா
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை கோயில்
- பஞ்சபூதம்
- அண்ணாமலை கோவில்
- கிரிவலம்
- சித்ராய்
- திருவண்ணாமலை கோலாகலம்
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னீ தலமாக இருப்பது திருவண்ணாமலையார் திருக்கோவில். அண்ணாமலையார் திருக்கோவிலில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் அமைந்துள்ளது. மாதத்திற்கு ஒரு முறை பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். ஆனால் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை இருக்கின்ற பவுர்ணமிகளில் பிரசித்திபெற்ற பவுர்ணமியாக இருக்கக்கூடியது சித்திரை மாதம் வரக்கூடிய சித்திரா பவுர்ணமி இந்த பவுர்ணமியில் சித்தர்கள், பக்தர்களோடு கிரிவலம் வருவது ஐதீகம்.
ஆகையால் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இன்று ஒரே நாளில் திருவண்ணாமலையில் கூடி அண்ணாமலையாரை தரிசிப்பதோடு, கிரிவலப்பாதையும் மேற்கொள்வர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தரும் ஆன்மீக பக்தர்களின் வருகைக்காக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்டங்களிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், 6 சிறப்பு ரயில்களும் இன்றைய தினம் இயக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாதுகாப்பிற்காக விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயிலிலிருந்து பக்தர்களை சமாளிக்கும் வகையில் கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் சுமார் 1 அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் நீர் மோர்களும், தண்ணீர்களும் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்வதோடு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொண்டும் வருகின்றனர். நாளை அதிகாலை 5.47 மணிவரை உள்ள இந்த கிரிவல பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு செல்வர். கிரிவலப்பாதை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருக்கோவில், கிரிவலப்பாதை, நகரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுமார் 550க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக பக்தர்களை கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நிலவு இன்று மாலைக்கு மேல் வரவிருப்பதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள் என்பதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.