கே.வி.குப்பம், ஏப்.23: பறவை காய்ச்சல் எதிரொலியால் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு கிடுவென உயர்ந்தது. ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் கடந்த பிப்ரவரி மாதம் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கோழிகள் இறந்த பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகளை 3 மாதங்களுக்கு மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் ஆந்திரா எல்லையில் உள்ள வேலூர் மாவட்டத்தில் கோழி இறைச்சி வாங்கும் மக்கள் பீதியில் இருந்து வந்தனர். ஆந்திராவில் நடந்ததை போன்று தற்போது கேரளாவிலும் பறவை காய்ச்சல் பரவியதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள அசைவ பிரியர்கள் கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மாறாக மீன், காடை, ஆடு, உள்ளிட்ட இறைச்சிகளை வாங்க கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் கோழி இறைச்சியின் விலை கணிசமாக குறைந்தும், மற்ற இறைச்சிகளின் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பிரபலமான ஆட்டு சந்தைகளுள் ஒன்றான கே.வி.குப்பம் ஆட்டுசந்தை நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரகங்கள் அதிகம் கொண்டு வரப்பட்டது. இதனால் சந்தையில் மொத்தம் 500 ஆடுகள் வரை குவிந்தது. இதில் ஆடுகள் ₹20 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரையில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் ஆடுகளை இறைச்சிக்காக வாங்க திரண்டதால் சந்தை களைகட்டியது. சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அசைவ ஓட்டல் உரிமையாளர்கள் வழக்கத்தை விட கூடுதலாக விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகளின் விலை கிடுகிடு என உயர்ந்திருந்தது. தொடர்ந்து வரும் வாரங்களில் ஆடுகள் வியாபாரம் கணிசமாக உயரும் என்றும், இதேபோன்று வருகின்ற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என்றும் எதிர்பார்ப்பில் இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
The post ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு கிடு உயர்வு பறவை காய்ச்சல் எதிரொலி கே.வி.குப்பம் appeared first on Dinakaran.