×

புதுவையில் ஆன்லைன் கும்பல் கைவரிசை 4 பேரிடம் ₹5.38 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, ஏப். 23: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலின் கை வரிசையால் 4 பேர் ரூ.5.38 லட்சத்தை பறிகொடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பவருக்கு தெரியாத நபர் போன் செய்து மும்பை காவல்துறை அதிகாரி என கூறி பேசியுள்ளார். அப்போது, கோபி கிருஷ்ணா பெயரில் தைவானில் இருந்து சட்டவிரோத பொருட்கள் உள்ள ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், இதற்கு அபராத தொகை செலுத்த வேண்டுமெனவும், இல்லையென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் கூறி பயமுறுத்தியுள்ளார்.

இதனால் பயந்து அவரும் ரூ.5 லட்சத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகே, அவர் மோசடி கும்பலுக்கு பணத்தை அனுப்பி ஏமாந்தது தெரியவந்தது. வைத்தியநாதன் என்பவர் ஓஎல்எக்ஸில் குறைந்த விலைக்கு பர்னிச்சர் விற்பனை செய்வதாக ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், அந்த விளம்பரத்தில் இருந்து தொலைபேசி எண் மூலம் தெரியாத நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பர்னிச்சரை டெலிவரி செய்ய முன்பணம் கொடுக்குமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பி வைத்தியநாதனும் ரூ.20 ஆயிரத்தை அனுப்பிய பிறகு, அந்த நபர் செல்போன் எண்ணை துண்டித்துள்ளார்.

ராய் ரஞ்சித் என்பவரிடம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையாக பிட் காய்னில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதை நம்பி அவரும் ரூ.15 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். ராகுல் என்பவரிடம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர் கொடுக்கும் பணியை ஆன்லைனில் மூலம் வீட்டிலிருந்து செய்தால் வருவாய் ஈட்டலாம் என கூறியிருக்கிறார். இதை நம்பி ராகுலும் ரூ.3 ஆயிரத்தை செலுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துள்ளார். அதன் பிறகு, தெரியாத நபரிடம் இருந்து எந்த பதிலும் வராமல் ஏமாந்துள்ளார்.

மொத்தமாக 4 பேரிடம் ரூ.5.38 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. மேலும், அன்பரசி என்ற பெண் கடன் பெறும் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். அதனை வட்டியுடன் குறித்த காலத்தில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு, தெரியாத நபர் அன்பரசியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 5 பேரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் ஆன்லைன் கும்பல் கைவரிசை 4 பேரிடம் ₹5.38 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Gopi Krishna ,Dinakaran ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி