×

உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி: 17 வயது குகேஷ் அபார சாதனை

டொரான்டோ: கேண்டிடேட்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். கனடாவின் டொரான்டோ நகரில் நடந்த இப்போட்டி, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதிப் போட்டியாகும். இதில் இந்திய வீரர்கள் டி குகேஷ், பிரக்ஞானந்தா, சந்தோஷ் குஜராத்தி உட்பட 8 முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர். மொத்தம் 14 சுற்றுகளாக இப்போட்டி நடந்தது. 13 சுற்று முடிவில் சென்னையை சேர்ந்த குகேஷ் (8.5 புள்ளி) முதல் இடத்திலும், அமெரிக்க வீரர்கள் ஃபேபியானோ கருவாணா, ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் அயான் நெபோம்னியாச்சி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் இருந்தனர். 14வது சுற்றில் குகேஷ் – ஹிகாரு மோதினர். அதில் இருவரும் சமன் செய்து தலா அரை புள்ளி பெற்றனர்.

மொத்தம் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த குகேஷ் (17வயது) உலக சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட தகுதி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, அதுவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட உள்ள இந்தியர், மிக இளம் வயது வீரர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியன் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் (31 வயது) உடன் குகேஷ் மோதுவார். கடைசி சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபசோவ்வை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் 5வது இடமும், மற்றொரு இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி, பிரான்சு வீரர் அலிரஸா ஃபிரோவுசா உடன் டிரா செய்து 6 புள்ளிகளுடன் 6வது இடமும் பிடித்தனர். கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு முதல் பரிசாக ரூ.78.5 லட்சம் வழங்கப்பட்டது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சாதனை வீரர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: வியத்தகு சாதனை புரிந்துள்ள குகேஷுக்கு எனது பாராட்டுகள். ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மிக இளவயது ‘சேலஞ்சர்’ ஆக வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி பெறும் முதல் வீரராக சாதித்துள்ளார். அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் வெற்றிவாகை சூடிட எனது வாழ்த்துகள்.

* பிரதமர் மோடி, முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி: 17 வயது குகேஷ் அபார சாதனை appeared first on Dinakaran.

Tags : World Chess Championship ,Gukesh ,Toronto ,India ,D. Gukesh ,Candidates Open Chess Tournament ,Toronto, Canada ,Dinakaran ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு