×
Saravana Stores

இதய, மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் வரவேண்டாம் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வனத்துறை உத்தரவு

கோவை: சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலை பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவையை கடந்து சென்றால் 7வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

இந்த மலை பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்த மலை பாதையில் பக்தர்களுக்கு ஏற ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, தினமும் பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சித்ரா பவுர்ணமி நாளான இன்று (23-ம் தேதி) ஏராளமான பக்தர்கள் மலையேற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட்ட 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களுக்கு வனத்துறையினர் புதிய கட்டுப்பாடுகளையும், சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் வனத்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டும் செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும். பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் போட வேண்டாம். மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. வனப்பகுதிக்குள் எங்கும் தீ மூட்டக்கூடாது. வெள்ளிங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்துவிட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு கடந்த மாதங்களில் சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்து உள்ளனர்.

எனவே, இதய நோய் சம்மந்தப்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சு திணறல் உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் ஆகியோர் மலையேறுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பக்தர்களை கண்காணிக்க டிரோன்
வெள்ளிங்கிரி பகுதியில் வெயில் தாக்கம் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் மலையேற்றத்தில் ஈடுபட உள்ளதால் வனத்தில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் காட்டுத்தீயை தடுக்க சமீபத்தில், வாங்கப்பட்ட டிரோன்களை பயன்படுத்தி ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் தீயை அணைக்கவும், பக்தர்களை கண்காணிக்கவும், அவசர காலங்களில், அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

* சதுரகிரிக்கு முதியோர் வருவதை தவிர்க்கவும்: கோயில் நிர்வாகம் வேண்டுகோள்
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயிலில் மாதந்தோறும் பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது பிரதோஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் ேகாயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முதியோர்கள் சதுரகிரி மலைக் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளையும் பக்தர்கள் அழைத்து வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post இதய, மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் வரவேண்டாம் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வனத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : KOWAI ,FOREST DEPARTMENT ,SILINGRI ,CHITRA PURNAMIYOTI ,Mount Silingiri ,Bundi ,Gowai ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையில் மழை...