நெல்லை, ஏப்.23: நெல்லை மாவட்டம் பத்தமடையில் இடிந்து காணப்படும் கன்னடியன் கால்வாய் பாலச்சுவரால் விபத்து அபாயம் நிலவுவதால் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பத்தமடை பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கன்னடியன் கால்வாய் பாலத்தை தாண்டியே பொதுமக்கள் எம்ஜிஆர் நகருக்கும், சிவானந்தா தெருவிற்கும், தாமிரபரணி நதிக்கும் செல்ல வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் ராமசேஷ ஐயர் பள்ளிக்கும் செல்கின்றனர்.
பத்தமடை கன்னடியன் கால்வாய் மீதான பாலத்திற்கான சுவர் தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில், எந்நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்துவதோடு கன்னடியன் கால்வாய் சுவரை துரிதமாக சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பத்தமடையில் இடிந்து காணப்படும் கன்னடியன் கால்வாய் பாலசுவரால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.