- எங்களுக்கு
- ஈரான்
- யூனியன் ஊராட்சி
- சென்னை
- சீமென்ஸ்
- இந்திய ஒன்றியம்
- யூனியன் அரசு
- அமெரிக்கா
- யூனியன்
- தின மலர்
சென்னை: அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மாலுமிகளை மீட்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வர்டு சீமென்ஸ், யூனியன் ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பார்வர்டு சீமென்ஸ், யூனியன் ஆப் இந்தியா துணை தலைவர் நரேந்திர ராவ் அளித்த பேட்டி: அமெரிக்காவிற்கு கடந்த மாதம் 26ம் தேதி கன்டெய்னர்களை ஏற்றிச்சென்ற எம்.வி.டாலி என்ற கப்பலில் ஏற்பட்ட மின்சார பழுதின் காரணமாக பால்டிமோர் நகரத்தில் உள்ள பட்டாப்ஸ்கோ நதியின் மேல் பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் மீது மோதியது. இதுபற்றி கப்பலில் பணியாற்றிய 22 மாலுமிகளிடம் தற்போது வரை அமெரிக்கா புலன் விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மாலுமிகளின் குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நடந்த விபத்தை குற்றமாக கருதாமல் மாலுமிகளை விடுவிக்க ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கடந்த ஏப்.13ம் தேதி இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட எம்எஸ்சி அரைஸ் என்ற கப்பலை ஓமன் வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கைப்பற்றியுள்ளது. இதில் 18 இந்திய மாலுமிகளை பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானில் சிக்கியுள்ள 18 மாலுமிகளில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எனவே, இந்த இரு நாடுகளில் சிக்கியுள்ள மாலுமிகளை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து வைத்திருக்கும் இந்திய மாலுமிகளை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.