×

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: மே 26ம் தேதி கடைசி நாள்

சென்னை: சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பிற்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பிக்க மே 26ம் தேதி கடைசி நாள் என்றும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறைகள். சென்னை ஐஐடியின், பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் பிரிவுகளில் நான்காண்டு படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நடக்கிறது. மே 26ம் தேதி விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளாகும். ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 30 ஆயிரம் மாணவர் சேர்க்கையை இலக்காக வைத்துள்ளதாகவும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுக்குள், 50,000 மாணவர்களை இந்த படிப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம் ஆகியவை அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட பாட திட்டஙள். இவை வரும் காலங்களில் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். குறிப்பாக இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் திட்ட தலைவரான பேராசிரியர் அனிருத்தன் கூறுகையில், இந்த 4 ஆண்டு கால பாடத்திட்டம், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகள் போன்ற அன்றாட தொழில்நுட்பம் முதல் அதிநவீன மருத்துவம் வரை பலதரப்பட்ட சாதனங்களுக்கான மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் சோதிக்கவும் மாணவர்களை தயார்படுத்தும்.

மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் திறமையானவர்களாக இருப்பார்கள். படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் அனைவரும் தொழிலுக்குத் தயாராகும் வகையில் இந்தப் படிப்பை வடிவமைத்துள்ளோம். பொறியியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் மின்னணு அமைப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

The post சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: மே 26ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : IIT ,Chennai ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை...