×

மதுரை வந்த அழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை: இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்

மதுரை: வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக மலையில் இருந்து புறப்பட்டு வந்த அழகரை மூன்று மாவடியில் மதுரை மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடக்கிறது. இதற்காக நேற்று முன்தினம் மாலை கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

நேற்று அதிகாலையில் மூன்றுமாவடிக்கு வருகை தந்த கள்ளழகரை மதுரையில் லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கோ.புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார். இன்று (ஏப். 23) அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வழியில் உள்ள கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பின்பு காலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். அவரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்கிறார். ஆற்றில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்பு வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயில் சென்றடைகிறார். இந்த விழாவில் கலந்துகொள்ள மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் நேற்று மாலை முதலே மதுரையில் பக்தர்கள் குவிந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை மற்றும் லாலா சத்திரம் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு, நான்கு புறமும் பக்தர்கள் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள், உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

The post மதுரை வந்த அழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை: இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Alaghar ,Madurai ,Vaigai river ,Alagarai ,Three Mavadi ,Vaibhavat ,Chitrai festival ,
× RELATED குடிநீர் தொட்டியை கமிஷனர் ஆய்வு