×

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 39 தொகுதிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் (43 கட்டிடங்கள்) உள்ள வலுவான அறைகளில் (ஸ்டிராங்க் ரூம்) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஒதுக்கி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வலுவான அறைகளை பாதுகாக்க 15 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டும் தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வலுவான அறைகள் இரட்டை பூட்டு அமைப்புகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள் சுற்றளவு பகுதி துணை ராணுவ வீரர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

இரண்டாவது பகுதியில் மாநில ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு பணியில் மாநில காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் உள்ளது. மேலும், வலுவான அறையின் பாதுகாப்பை சரிபார்க்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தினமும் வலுவான அறைகளுக்கு செல்கின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அண்டை மாநிலங்களுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் எல்லை மாவட்டங்களிலும் வாக்கு எண்ணும் நாள் வரை முக்கியமான இடங்களில் பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் நிறுத்தப்படும்.

The post தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,CHENNAI ,Tamil ,Nadu ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Chief Officer ,Satyapratha Saku ,Dinakaran ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...