×

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், முத்தரசன் சந்திப்பு: அமைச்சர்கள், வேட்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் ேநற்று சந்தித்து பேசினர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது விசிக விழுப்புரம் தொகுதி வேட்பாளர் டி.ரவிகுமார், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டதற்காக திருமாவளவன் நன்றி தெரிவித்து முதல்வருக்கு சால்வை அணிவித்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவை தொகுதியில் வெற்றி பெற அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேரு உடன் இருந்தார். பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி:
தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று நம்புகிறோம்.

திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் வெற்றி பெறும். இந்த வெற்றி அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அகில இந்திய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சந்தித்து பேசினார். அப்போது திருப்பூர் தொகுதி வேட்பாளர் சுப்பராயன், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். இதே போல முதல்வர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்து பேசினார். துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொது செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன், ஆரணி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அதே போல் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் வசந்தன் கார்த்திகேயன், உதயசூரியன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கமும் சந்தித்து பேசினர். தொடர்ந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் துரை சந்திரசேகர், கா.அண்ணாதுரை, பூண்டி கலைவாணன், தஞ்சை தொகுதி வேட்பாளர் முரசொலி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். அதே போல அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ராஜா, தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் டாக்டர் ராணி குமார் ஆகியோர் சந்தித்தனர். அதே போல அரக்கோணம் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், தலைமை கொறடா கோ.வி.செழியன், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், செ.ராமலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் க.அன்பழகன், நிவேதா முருகன், பன்னீர் செல்வம், ராஜ்குமார் ஆகியோரும் முதல்வரை சந்தித்து பேசினர்.

The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், முத்தரசன் சந்திப்பு: அமைச்சர்கள், வேட்பாளர்களும் வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Mutharasan ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Lok Sabha ,Puducherry ,Dinakaran ,
× RELATED கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க...