×

இன்று காலை முதல் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்; தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை தொடங்கியது: மே 20ம் தேதி கடைசி நாள்

சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று காலை முதல் தொடங்கிய நிலையில், மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மே 20ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும்.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் ஏழை எளிய குடும்பத்து மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது. இதை தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் போட்டி போட்டு இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தனர். இதற்கான விண்ணப்ப பதிவு வரும் மே 20ம் தேதி வரை நடக்க உள்ளது. ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் அட்மிஷன் பெற முடியும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் படிக்க விண்ணப்பிக்கலாம். நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

மேலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் அட்மிஷனுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

The post இன்று காலை முதல் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்; தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை தொடங்கியது: மே 20ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...