×

அழகர்மலையில் இருந்து வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் இன்று எதிர்சேவை: நாளை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்

மதுரை: வைகை ஆற்றில் எழுந்தருள் மலையில் இருந்து புறப்பட்டு வந்த அழகரை மூன்று மாவடியில் பக்தர்கள் திரண்டு வரவேற்ற எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.மதுரை அருகே உள்ள அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சித்ரா பௌர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக, கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை எழுந்தருள்வார்.

இதற்காக அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் வேடம்புரிந்த அழகர், தங்கப்பல்லக்கில் நேற்று மாலை 6.30 மணிக்கு மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள 18ம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று காலை மதுரை நகரின் நுழைவுப் பகுதியான மூன்றுமாவடிக்கு வருகை தந்த கள்ளழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. இன்று இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு கள்ளழகர் வருகிறார். நாளை அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றை நோக்கி புறப்படுகிறார்.

வரும் வழியில் கருப்பணசுவாமி கோயில் அருகே, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பின்பு காலை 5.50 மணி முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். முன்னதாக அவரை வீரராகவப்பெருமாள் வரவேற்கிறார். ஆற்றில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு வழிநெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார்.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள மதுரை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் இன்று காலை முதலே மதுரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post அழகர்மலையில் இருந்து வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் இன்று எதிர்சேவை: நாளை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் appeared first on Dinakaran.

Tags : Kallazakar ,Alagarmalai ,Tummavadi ,Vaigai river ,Madurai ,Alagara ,Alagaramalai ,Chitrai festival ,Sage Manduka ,Chitra ,Dinakaran ,
× RELATED அழகர் மலைக்கு திரும்பினார் அழகர்: 2 டன் மலர்கள் தூவி பக்தர்கள் வரவேற்பு